இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தின்போது கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் பற்றிய பார்வை, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மாநாடு உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதோடு உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்து வரும் புதிய அரசியலமைப்பு விடயத்தினை தமிழ்க் கட்சிகள் கூட்டாக கையாளுதல் விடயத்தில் தமிழரசுக்கட்சியின் வகிபாகம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று அக்கட்சியின் நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.