மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.