ஜனவரி 7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிகப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகச்சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள தன் ஊடாக கடந்த காலத்தில் நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டிருந்த தட்டுப்பாடு நீங்கும்.
அரசாங்கம் இறக்குமதி செய்த 5200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி கடந்த 30ஆம் திகதி எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதனை பகிர்ந்தளிக்கும் பணிகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் கட்டமாக 520 மெற்றிக் தொன் எமது கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை
பகிர்ந்தளித்து வருகிறோம்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை நான்கு கட்டங்களாக விநியோகித்துள்ளோம்.
மேலும் 5200 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யும் அனுமதியையும் நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளோம்.
எதிர்வரும் 7ஆம் திகதி குறித்த தொகை எமக்கு கிடைக்கப்பெறும். 7ஆம் திகதியின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் – என்றார்.