வன்னி பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை!

வன்னி பாடசாலைகளின் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை!

editor 2

வன்னியிலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை
நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ன உறுப்பினர் துரைராசா ரவிகரன் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்
குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இந் நிலையில் மூன்று மாத காலத்தில் வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி எ.அன்ரன் யோகநாயகம் பதிலளித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் தரவுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது கோரினார்.

சில மாவட்டங்களில் ஆசிரியர்கள், மேலதிகமாகவும், சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் வெற்றிடமாகவும் இருப்பதற்கான காரணமென்ன என கேள்வி
எழுப்பிய ரவிகரன், இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற் கொள்ளாமலிருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வடமாகாணக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வே.ஆயகுலன், புதிய ஆசிரியர் நியமனங்களை வன்னிப் பகுதிகளுக்கு வழங்கி வருவதாகவும் யாழ். மாவட்ட ஆசிரியர்கள் வெளிமாவட்ட சேவைக்காலம் எட்டு வருடங்கள் முடிவுற்றவுடன், தமது இடங்களுக்கு இடமாற்றம் கோரியதனாலேயே யாழ். மாவட்டத்தில் மேலதிகமான ஆசிரியர் தொகை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் ஆசிரியர் நியமனங்களை பகிர்ந்தளிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ரவிகரன் எம்.பி, வன்னிப் பகுதிக்கு கணிதப் பிரிவு, உயிரியல் பிரிவுகளுக்குக்கூட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

இதன்போது வடமாகாண பிரதிப் பிரதமசெயலாளர் திருமதி.எ.அன்ரன்யோகநாயகம் பதிலளிக்கையில்,

மிக விரைவில் ஆசிரியர் சங்கங்களுடனும் கலந்துரையாடி, ஏற்கனவே நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பிலும் தீர்மானங்களை மேற்கொண்டு, பொதுவாக அனைத்து மாவட்டங்களும் பயன் பெறக்கூடிய வகையில் ஒரு இடமாற்றக் கொள்கையை வகுத்து அதற்கான அனுமதியைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்தார்

Share This Article