மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்கிறார் பொன்சேகா!

மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்கிறார் பொன்சேகா!

editor 2

விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் மீது புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை. போர் இடம் பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்க
வில்லை. மகிந்த ராஜபக்ஷ மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலை நடத்தவோ எந்தவொரு தீவிரவாதியும் முற்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்
போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கினர்.

அப்போது எனக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா? வெலிகடைச் சிறையில் என்னை அடைத்த தருணத்தில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியொருவர் சிறையில் இருந்தார். அத்தருணத்தில் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை. பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்தில் இராணுவத் தலைமையகத்தில் என் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த வந்திருந்த முரிஸ் என்ற தீவிரவாதியும் நானும் ஒரே பங்கில்தான்
அமர்ந்திருந்தோம். அப்போது எனக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லையா?

அதனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எப்போதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். மகிந்த, பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதாகவே ஆட்சிக்கு வந்தார். போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்ததை அறிவித்தார்.

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. மகிநத் ராஜபக்ஷ புலிகளுடன் நெருங்கிய உறவை அவர் பேணியிருந்தார். அதனால் புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை – என்றார்.

Share This Article