எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகளைச் செலுத்தும் முறைமை தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த மே மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அஸ்வெசும தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வறிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 8,500 ரூபா கொடுப்பனவு, 10,000 ரூபாவாகவும், மிகவும் வறிய குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 15,000 ரூபா கொடுப்பனவு 17 ஆயிரத்து 500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் குறித்த பிரிவினருக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 2 சமூக பிரிவினருக்கான கொடுப்பனவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
அதன்படி, ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை, பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கும், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நிலையற்ற பிரிவினருக்கும் 5,000 ரூபாய் வழங்கப்படும் எனக் குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.