மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் 116 பேர் நீக்கம்!

Editor 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. 

பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அந்த கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். 

பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258 (1) மற்றும் (2) பிரிவின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 116 காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பிரதி காவல்துறை மா அதிபர் எம்.என்.சிசிர குமாரவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காகப் பிரதான பாதுகாப்பு அதிகாரி, நிர்வாக அதிகாரிகள், சாரதிகள் உட்பட 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே எஞ்சியுள்ளளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், நாளாந்தம் 20 பேருக்கும் குறைவானவர்களே கடமையாற்றுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உப தலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

Share This Article