தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்றைய தினம் புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்வதனை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம், திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்.
அத்துடன், திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம், கொழும்பு மற்றும் காலி வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, வட மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.