கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னாரின் அடம்பன் பகுதியில் வசிக்கும் வசிக்கும் 146 குடும்பத்தினருக்கு “மக்கள் செயல்” (People’s Action) அமைப்பினரால் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய நாள் யாழ்ப்பாணத்திலிருந்து அடம்பனுக்குச் சென்ற குறித்த அமைப்பினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசி, மா, சீனி, ரின்மீன் உட்பட்ட பொருட்களைக் கையளித்தனர்.
குறித்த பகுதியில் வாழ்கின்ற மக்களில் பெருமளவானவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்பவர்கள் என்பதால் அண்மைய நாட்களாக பொருளாதார ரீதியாக பலத்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக அந்தக் கிராமத்தின் பிரதிநிதிகளால் குறித்த அமைப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய குறித்த உதவிகள் வழங்கப்பட்டன. கையளிக்கப்பட்ட பொருட்களின் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாய் என்று “மக்கள் செயல்“ அமைப்பினர் தெரிவித்தனர்.
நிவாரணப் பொருட்களைக் கையளிப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற குழுவினர், மன்னார் – யாழ்.வீதியில் பயணித்த போது வெள்ளப்பெருக்கினை எதிர்கொண்டதால், நேற்று உடனடியாக யாழ்.திரும்ப முடியாத நிலை ஏற்பட்டதுடன், இன்று காலையே மீண்டும் யாழ்.திரும்பியிருந்தனர்.
சமூகத்தில் வாழ்கின்ற பல்வேறு நலன்விரும்பிகளின் நிதிப் பங்களிப்பில் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் குறித்த “மக்கள் செயல்“ அமைப்பில் தன் ஆர்வமாக இளைஞர்கள் இணைந்து பணியாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.