தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 23ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கிலிருந்து வடமேற்கில் நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
21ஆம் திகதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காற்று சுழற்சி உருவாகக் கூடும்.
மேலும் இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.