புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளைய தினம் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளார்கள்.
இதன்போது, சகல அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளின் பொறுப்புகளைத் தாம் வகிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்படவுள்ளதுடன், அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக 25 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், அந்த அமைச்சுகளுக்காக 25 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் வியாழக்கிழமையன்று இடம்பெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்கு முன்னதாக புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்தைச் செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சபாநாயகர் பதவிக்கு நான்கு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குப் பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.