திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். இது சிறுவர்களின் போசாக்கு
தேவைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தவை வருமாறு,
திரிபோஷா நிறுவனத்தை மூடிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. திரிபோஷா இந்த நாட்டில் நிறை குறைந்த சிறுவர்கள், கர்ப்பவதித் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் போஷாக்கை கருத்தில்கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் வேலைத்திட்டமாகும்.
போஷாக்கு என்ற அடிப்படையில் நாங்கள் திரிபோஷா மாத்திரமே கொடுத்து வருகிறோம். அதனை நிறுத்துவது எதிர்காலத்தில் பெரும் போஷாக்கு குறைபாட்டு பிரச்னைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் வியாபாரிகள் சிலரே இந்த நிறுவனத்தை மூடிவிட ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருக்கவேண்டும்.
தற்போது இதனை மூடிவிட்டு சில காலங்களில் தனியாருக்கு விற்பனை செய்வது இவர்களின் திட்டமாக இருக்கலாம். இடதுசாரி கொள்கையுடைய
ஜனாதிபதி ஒருவரின் ஆட்சியில், வறுமையில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் திரிபோஷா சத்துணவை நிறுத்த நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது- என்றார்.