நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்பு தொடங்கியது!

நாகர்கோவில் - எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் புனரமைப்பு தொடங்கியது!

editor 2

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுது மட்டுவாழ் செல்லும் வீதியிலுள்ள பிரதான பாலத்தை புனரமைக்கும் பணியை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆரம்பித்து வைத்தார்.

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பிரதான பாலம் 1959 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

மாரி காலம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து மாரி காலம் முடிவடைந்தும் சிலமாதங்களாக (ஒரு வருடத்தில் சுமார் 6 மாதங்கள்) குறித்த பாதையில் நீர் நிரம்பி நிற்பதனால் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவது வழமை.

இந்த நிலையில் அண்மைய வருடங்களில் பல தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டும் வன ஜீவராஜிகள் திணைக்களம் அது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று கூறி பல வருடங்களாக குறித்த பாலத்தை அமைக்க தடைபோட்டுக் கொண்டிருந்தது.

இதனால் சுமார் மூன்று ஆண்டுகளாக குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள்
தடைப்பட்டிருந்தன. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு. பிரபாகரமூர்த்தி மற்றும் நாகர்கோவில் மக்கள் மேற் கொண்ட தொடர் முயற்சிகளால் குறித்த பாலத்தை புனரமைப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் இணங்கியது.

இதனையடுத்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரின் ஏற்பாட்டில் வடமாகாண
ஆளுநரால் குறித்த பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், கிராம
உத்தியோகத்தர், துறைசார் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள், கிராம மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வீதியைப் பயன்படுத்த முடியாமையால் சுமார் 7 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள எழுதுமட்டுவாழ் சந்திக்கு செல்வதற்கு மருதங்கேணி, புதுக்காடு ஊடாக சுமார் 40 கிலோ மீற்றர் தூரம் சுற்றி மக்கள் பயணித்துக் கொண்டுள்ளனர்.

Share This Article