தேசியப் பாதுகாப்புக்கு இன்று மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தேங்காய் வாங்குவதற்குக் கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து நேர்ந்துள்ளது.
இது அந்தியச் செலாவணியைத் தரும் ஒன்றாக இருப்பதால், அது பாதிக்கப்படக் கூடாது.
அதேநேரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பலமாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் கூட இது பாதிப்பாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி வரிச்சுமையைக் குறைப்பதாக உறுதியளித்தார்.
எனினும், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய போதிலும், அரசாங்கத்தால் வரிச்சுமையைக் குறைக்கவும், வரி சூத்திரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாடு இல்லாமல் வரி சூத்திரத்தை மாற்ற முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், வரி சூத்திரத்தை மாற்றும் நடவடிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் வரிச்சுமையைக் குறைக்க எதிர்பார்த்தோம்.
எனினும், மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.
எனவே இந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றப் பெரும்பான்மை கிடைத்தால் வரிச்சுமையைக் குறைத்து, மக்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை திருத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.