சிவராம் கொலை உட்பட்ட 7 சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைக்கு பணிப்பு!

சிவராம் கொலை உட்பட்ட 7 சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைக்கு பணிப்பு!

editor 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், பிணைமுறி விவகாரம், ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலை உட்பட முக்கிய 7 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொடர்புடைய பொலிஸ் பிரிவுகளுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் இதில் அடங்கும்.

மேலும், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் கடத்தப் பட்டு, மறுநாள் பாராளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் (தர்மரட்ணம் சிவ ராம்) மரணம் தொடர்பான விசாரணையும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிகமவில் டபிள்யூ 15 ஹோட்டலுக்கு அருகாமையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மரணத்துக்கு காரணமான டிசெம்பர் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத் தின் உபவேந்தன் ரவீந்திரநாத் காணாமல் போனமை தொடர்பான விசாரணையும் இதில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

Share This Article