தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக திருமலை, அம்பாறை பிரதிநிதிகளை இழப்பதா? – தமிழரசுக்கட்சி தொடர்பில் சுரேஷ்!

தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக திருமலை, அம்பாறை பிரதிநிதிகளை இழப்பதா? - தமிழரசுக்கட்சி தொடர்பில் சுரேஷ்!

editor 2

தமிழரசுக் கட்சி ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையை ஏற்படுத்தப்போவதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த பாராளுமன்றத் தேர்தலை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிப்போம்.

நாங்கள் பிரிந்து நிற்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடங்களை இழந்து விடும் நிலை இருக்கிறது. கடந்த முறை அம்பாறையில் அந்த இடத்தை இழந்திருக்கின்றோம். எனவே அங்கு தமிழ்ப்பிரதிநிதுத்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக்கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.

இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம்.

எனவே இரு தரப்பும் இணைந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்போதே அந்த பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும். எனவே 7ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமான பதிலை அறிவிக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

திருகோணமலையில் வீட்டுச் சின்னத்திலும், அம்பாறையில் சங்குச் சின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என நாம் முன்னர் பேசியிருந்தோம். அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதாகக் கூறுகிறார்கள். அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகள் மற்றும் 36 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள்.

மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம். ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக இரண்டு ஆசனங்களை இழக்கப்போகின்றார்கள்.

இதுபோல ஒரு முட்டாள்தனமான முடிவு எதுவும் இருக்காது- என்றார்.

Share This Article