வடக்கு – கிழக்குக்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் போட்டியிட முயற்சிப்பது, தமிழ்த் தேசிய அரசியலை வலிந்து தூக்கிலிடுவதற்கு ஒப்பானது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அவ்வாறான நகர்வுகள் தமிழ்த் தேசிய இறைமை அரசியலை அடையாள அரசியலாகச் சுருக்கும் முயற்சியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள், வாக்களிப்பின் வெவ்வேறு பரிமாணங்களையும் மக்களின் அரசியல் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளன.
தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்ட அலையில் இளைஞர்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் மத்திய ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதேபோன்று தமிழ் பிரதிநிதித்துவம் ஏலவே இல்லாமல் போயுள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் விட்டுக் கொடுத்தல் அல்லது இணைந்து போட்டியிடக்கூடிய பொருத்தமான பொறிமுறையின் ஊடாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.