நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும்ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சியின் பங்காளிக் கட்சியான ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு, கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச்சின்னத்தில் போட்டியிட உள் ளோம்.
இதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறோம்.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு ஒருமித்த தீர்மானமாக சங்கு சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனடிப்படையில், சங்கு சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் எமக்கு சங்கு சின்னத்தை தேர்தல்கள் திணைக்களம் ஒதுக்கியுள்ளது – என்றும் கூறினார்.
இதேவேளை, இம்முறை தமிழ் அரசுக் கட்சி, ஈ. பி. டி. பி. கட்சிகளும் கொழும்பில் போட்டியிடுவதற்கு திட்டமிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.