சங்கு சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமாக தேர்தல்கள் திணைக்களம் அங்கீகரித்துள்ளது. இதனால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அந்தக் கூட்டணி சங்கு சின்னத்திலேயே களமிறங்கவுள்ளது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களமிறக்குவதற்காக தமிழ்ப் பொது அமைப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பை தோற்றுவித்தன. பொதுக் கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்ட பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் சுயேச்சையாக சங்கு சின்னத்தில் போட்டியிட்டு 2 இலட்சத்து 26 ஆயிரத்து 343 வாக்குகளை பெற்றிருந்தார்.
இந்த நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகித்த பெரும்பான்மை கட்சிகளை கொண்டகூட்டணியான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிட விரும்பியது. இதைத் தொடர்ந்து, தனது வழக்கமான குத்துவிளக்கு சின்னத்துக்கு பதிலாக சங்கு சின்னத்தை கோரி தேர்தல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பித்தது.
தற்போது தேர்தல்கள் திணைக்களம் சங்கு சின்னத்தை ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு ஒதுக்கியுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் பொது அமைப்பான தமிழ் மக்கள் பொதுச் சபை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி போட்டியிட எதிர்ப்புத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.