கல்வித்துறை அரசியலாகிவிட்டது. தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. இலங்கையை உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக மாற்றும் கல்வி முறையை தயார் செய்ய வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மறுமலர்ச்சி யுகம் – வளமான நாடு நம் அனைவருக்கும் அழகான வாழ்க்கை என்ற இந்த தொலைநோக்கை யதார்த்தமாக்குவதற்கு கல்வியின் முக்கியத்துவத்தை இங்குள்ள அதிபர்கள் நன்கு அறிவார்கள். அரசாங்கம் என்ற வகையில் கல்விக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழிகாட்டுதலையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.
கல்வி என்பதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை மட்டும் வழங்குவதன்று. அதையும் தாண்டிய ஒரு விரிந்த தொலை நோக்கு கல்வியில் உள்ளது. தொழிலுக்காக மட்டுமின்றி இந்த நாட்டைப் பொறுப்பேற்கக்கூடிய, இந்த நாட்டை மாற்றக்கூடிய, இந்த நாட்டை வழி நடத்தக்கூடிய நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் எமது கல்விக் கொள்கையைத் தயாரித்துள்ளோம்.
ஒரு வளமான நாடு என்பதன் மூலம் எமது அரசாங்கம் நாடுவது பொருளாதார அடிப்படையில் மட்டும் வளமான நாடாக இருப்பதையல்ல. கலாசாரம்,
ஒழுக்கப் பெறுமானங்கள் மற்றும் மனப்பாங்குகளுடன் அனைத்து அம்சங்களிலும் நாம் வளம் பெற வேண்டும் என்பதாகும்.
இத்தகைய சமூகத்தில் நாம் அனைவரும் அழகான வாழ்க்கையை வாழ முடியும். நாம் மறுமலர்ச்சி யுகம் என்று கூறுவது, இந்த நாட்டுக்கு ஒரு புதிய ஆரம்பம் தேவை என்பதையே ஆகும்.
ஐக்கியம், நல்லிணக்கம் மற்றும் நவீன உலகில் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய பிரஜைகளை நாம் உருவாக்கவேண்டும். நாம் முன்மொழிந்துள்ள கல்விக் கொள்கை இந்த அபிலாஷைகளை அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தற்போது சமூகத்தில் கல்வியின் மீது நம்பிக்கை இல்லை. கல்வியின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது. விரக்தியான நிலையே காணப்படுகிறது. தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித்துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை மற்றும் முறைமை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது.
இங்கு இந்த கல்வி முறைமையில் பணியாற்றும் உங்களிடம் தவறில்லை. காலாகாலமாக கல்வியில் கவனம் செலுத்தாமை கல்வியின் முக்கியத்துவம் ஒருநாட்டின் வளர்ச்சியில் கல்வியே அடிப்படைப் பங்காற்ற வேண்டும் என்ற பொறுப்பில் இருந்து படிப்படியாக அரசு விலகியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கல்வி அரசியல்மயமாகியுள்ள காரணத்தினால் இத்துறையில் உள்ள அனைவரும்
பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். உங்கள் தொழில் முறை கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் கல்வி முறையை கட்டியெழுப்ப நாம் விரும்புகிறோம்.
உங்களது பொறுப்பை சுதந்திரமாக நிறைவேற்றத்தேவையான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்-என்றார்.