இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு பைப்பர் படகையும் அதிலிருந்த இலங்கை மீனவர்கள் மூவரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
கஞ்சா போதை பொருள் அடங்கிய மூட்டைகளை சட்டவிரோதமாக தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி செல்ல காத்திருந்த போது நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நடுக்கடலில் மீனவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய கடல் பரப்புக்குள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமில் வைத்து மீனவர்களிடம் முழுமையான விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் சட்ட விரோத நடவடிக்கை ஈடுபடுவதற்காக இந்திய கடல் பகுதியில் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்பது தெரியவரும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொண்டி அடுத்த மணல்மேல்குடியை சேர்ந்த மர்ம நபர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் வாங்கி செல்லவதற்காக தொண்டியில் இருந்து சுமார் 15 நாட்டிக்கல் தூரம் நடுக்கடலில் காத்திருந்த போது திடீரென படகு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் படகுடன் இந்திய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் இருந்த காவல்படையினர் பிடித்துள்ளனர்.