தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தல் அபாயமுள்ளதால், அவர் தனது பாதுகாப்பில் அக்கறையெடுக்க வேண்டுமென
குறிப்பிட்டு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரால் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ். எம். வை.செனவிரட்னவால் சிங்களத்தில் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம்
உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் சந்திப்பு மற்றும் நிகழ்வுகளின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்போது அந்த விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுவதால் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே பொது விடயங்களின் கீழ் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அது தொடர்பில் அவதானமாகச் செயற்படுமாறும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிங்கள மொழியில் அமைந்த கடிதத்தையும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பையும் விக்னேஸ்வரன் எம்.பி. நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தார்.