மருத்துவர் அர்ச்சுனாவின் ஆதாரமற்ற அவதூறுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த சாவகச்சேரி நீதிவான், அர்ச்சுனாவுக்கு எதிராக 14
நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேநேரம், அவருக்கு பிணை ஒப்பமிட்டவர்களும் விலகியுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக செயல்பட்ட சமயத்தில், அர்ச்சுனா ஏற்படுத்திய குழப்பங்கள், பேஸ்புக் நேரலையில் பரப்பிய அவதூறுகள் தொடர்பான வழக்குகள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
சாவகச்சேரி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரிக்கு எதிராக முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டு அவதூறுகள் தொடர்பான வழக்கு முதலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது, அர்ச்சுனா தரப்பு சில ஆவணங்களை சமர்ப்பித்து தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் என்று கூறியது.
ஆனால், அவற்றை நீதிவான் நிராகரித்துவிட்டார். அர்ச்சுனா பரப்பிய தகவல்களுக்கான ஆதாரங்களாக அவற்றை ஏற்கமுடியாது என நீதிவான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மருத்துவர் அர்ச்சுனாவால் தினமும் பிரச்னைகள் உருவாகின்றன. அவரால் பொலிஸாருக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுகின்றன என்றும் சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதன்போது, ஆதாரமில்லாமல் இப்படி பேசிக்கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது என்று கண்டித்த நீதிவான், அர்ச்சுனா 4 தவணைகளிலும் ஆதாரங்களை முன்வைக்கவில்லை.
அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அடுத்த 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த வழக்கில் அர்ச்சுனாவுக்கு பிணை கையெழுத் திட்ட 3 பேரும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது கையை உயர்த்தினர். அவர்களின்
கருத்தை நீதிவான் கேட்ட போது, அர்ச்சுனாவுக்கு அளித்த பிணை ஒப்பத்திலி
ருந்து தாம் விலக விரும்புகின்றனர் என்று கூறினார்.
‘இதனை அர்ச்சுனாவிடம் தெரிவித்தீர்களா?’, என்று அவர்களிடம் நீதிவான்
வினவினார்.
அதற்கு ‘இல்லை’, என்று பதிலளித்த அவர்கள், ‘இந்த விவரத்தை அர்ச்சுனாவிடம் முன்னரே கூறினால் அவர் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்த்து விடுவார்’, என்ற அச்சத்தில் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தனர்.
வழக்கை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அன்றைய தினம்
பிணையாளிகள் மூவரையும் மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டார். அத்துடன், வேறு மூன்று பிணையாளிகளை அழைத்து வருமாறும் மருத்துவர் அர்ச்சுனாவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.