வடக்கு மீனவர்களை வசப்படுத்த சீனா முயற்சி – செல்வம் எம்பி கவலை!

வடக்கு மீனவர்களை வசப்படுத்த சீனா முயற்சி - செல்வம் எம்பி கவலை!

editor 2

இலங்கை – இந்திய மீனவர் பிரச்னையை பயன்படுத்தி வடக்கு மீனவர்களை தன்வசப்படுத்துவதற்கு சீன பல யுக்திகளை கையாண்டுவருகின்றது எனவும்,
இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்
தெரிவித்தார்.

அத்துடன், சீனா இராணுவம் வடக்குக்கு வரவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது எனவும், இதனையும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு-

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதும் நூற்றுக்கணக்கான ரோலர் படகுகள் வருகின்றன. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது அது அநீதியான கைது எனக் கூறுபவர்கள், எமது மீனவர்களின் துன்பநிலை பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். மீனவர் பிரச்னை சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் இந்தியா தட்டிக் கேட்கும் என எமது மக்கள் நம்புகின்றனர், எனவே, மீனவர் பிரச்னையிலும் நியாயமான தீர்வு அவசியம்
என்பது எமது கோரிக்கை. மீனவர் பிரச்னையை அடிப்படையாக வைத்து எமது மீனவர்களை தன் வசப்படுத்துவதற்கு சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது.

இதனை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதுமட்டுமல்ல சீன இராணுவம் எமது பகுதிக்கு வரவுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. எமது வடக்கு, கிழக்கு மண்ணில் இலங்கை இராணுவத்தால் எமது மக்கள் ஏற்கனவே துன்பங்களை அனுபவித்துவிட்டனர். காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அரச திணைக்களங்கள் காணிகளை பிடிக்கின்றன.

எமது பூர்வீகத்தை இல்லாது செய்யும் முயற்சியும் இடம்பெறுகின்றது. எமது வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. துப்பாக்கிச்சத்தம் இல்லாவிட்டாலும் போர்ச்சூழலில்தான் எமது மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு இலங்கையின் முப்படைகளால் ஆக்கிரமிப்பைக்கொண்டுள்ள எமது வடக்கு, கிழக்குக்கு சீனாவின் இராணுவம் வர இருக்கின்றதாம், ஏன் வருகின்றார்கள் என தெரியவில்லை, இதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதா? இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இதற்கு அனுமதி வழங்க முடியாது. எமது மீனவர்களை சீனா தன்வசப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது – என்றார்.

Share This Article