புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களை பயன்படுத்துதல், விவசாயத்தை நவீனப்படுத்துதல் மற்றும் நீர்ப்பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குதல் போன்ற துரிதமுறைகள் மூலம் 2040 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வை அடைவதற்கும் இலங்கை செயல்பட்டு வருகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக முதலீடுகள் ஊடாக உலகளாவிய நிதி வசதிகளை ஈர்ப்பதுடன், பெருந்தோட்டத் துறையை பெருந்தோட்டத் தொழிலில் இருந்து விவசாய வணிகமாக மாற்றுவது, நிலையான சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு மற்றும் உற்பத்திகளை மேம்படுத்துதல் மற்றும் டிஜிற்றல் மயமாக்கல் என்பன இதன் பிரதான வேலைத் திட்டங்களாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடந்த சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவற்றை கூறினார்.
மேலும், தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிடையே நமது நாடு
சிறந்த நாடு என்றே கூற வேண்டும்.
மாலைதீவு நம்மைப் போன்ற நாடாகும். ஆனால், அது மிகச் சிறிய நாடு. ஏனைய நாடுகள் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன். எனவே, நாம் இதில்
முதன்மையானவராக இருக்க வேண்டும்.
உலகம் இன்னும் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறது. சீனாவின் பொருளாதாரம் இன்னும் முழுத்திறனுடன் செயல்படவில்லை.
அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்லும். உலகின் இரண்டு முக்கிய பொருளாதாரங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். ஐரோப்பா முன்னோக்கி
நகர்ந்தாலும் அதில் சிக்கல்களும் உள்ளன. இந்தச் சூழலில்தான் நிலையான
வளர்ச்சி இலக்குகள் மீது நாம் கவனம் செலுத்துகிறோம்.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகிய போதிலும், நாங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது அவர் 20 கோடி டொலர்களை நம் நாட்டுக்கு வழங்கியதை நான் நினைவுகூர வேண்டும்.
சிறையிலிருந்து காலிதா ஜியாவிடுதலை செய்யப்பட்டதில் மகிழ்ச்சி
அடைகிறேன். ஷேக் ஹசீனா நீண்ட காலத்துக்கு முன்பே இதைச் செய்திருந்
தால், அவர் இன்னும் பங்களாதேஷின் பிரதமராக இருந்திருக்க முடியும்.
பங்களாதேஷில் நிலைமை விரைவில் சீரடையும் என்று நம்புகிறோம்.
குறுகிய காலத்தில் பங்களாதேஷ் மீண்டு வரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இலங்கையில் எங்களுக்கு நடந்ததை நினைவில் கொள்ள வேண்டும். பங்களாதேஷின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவராக நாங்கள் இருப்பதால், அந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
இவ்வுலகில் நிலைமைகள் சரியில்லை என்பதை இந்நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால், இந்த திட்டங்களில் இருந்து இலங்கை
விலகும் என்று அர்த்தமில்லை.
இந்த உலகளாவிய சூழலில், இலங்கையில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு சட்டம் தயாரிக்கும் பணிகளை அடுத்த ஆண்டு தொடக்கத்
தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது – என்றார்.