பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பினார்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பினார்!

editor 2

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் பொலிஸார் நால்வரும் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியிருந்தனர்.

அதேநேரம் நேற்று முதல் பங்களாதேஷில் காலவரையற்ற முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இணைய சேவைகளை முடக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

அவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பின்னணியில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share This Article