பொதுஜன பெரமுன பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை பொதுச்செயலாளர் சாகர காரியவசம் ஏற்க வேண்டும். இவரை பதவி நீக்கி அமைச்சர் ரமேஷ் பதிரனவை பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என மின்சாரத்துறை மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைக் களமிறக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்தார் இருப்பினும் ஒரு தரப்பினர் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனை ஏதும் முன்வைக்கப்படவில்லை.மாறாக உதயங்க வீரதுங்கவின் யோசனை முன்வைக்கப்பட்டு,முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்று சபையில் பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யவும்,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவும் மாத்தறை மாவட்ட பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகப் பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.கட்சி பிளவடைந்துள்ளமைக்கான பொறுப்பை இவர் ஏற்க வேண்டும்.2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவரது முறையற்ற செயற்பாடுகளினால் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சிரேஷ்ட தரப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள்.
பொதுஜன பெரமுனவை பாதுகாக்க வேண்டுமாயின் சாகர காரியவசத்தை பதவி நீக்க வேண்டும்.அமைச்சர் ரமேஷ் பதிரனவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கும் யோசனையைக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முன்வைப்பேன் என்றார்.