கனடாவுக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யோகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா சஜீவனின் மரணம் கழுத்து நெரித்ததாலேயே நிகழ்ந்துள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நேற்றைய நாள் கனடாவிற்குச் செல்வதற்காக, நேற்று முன்தினம் 20 இலட்சம் ரூபா பணத்தினை வங்கியில் பெற்றுக்கொண்டு யோகபுரத்திலிருந்து பாண்டியன் குளத்திற்குச் சென்றுள்ளார்.
இரவு 8.40 மணிக்குப் பின்னர் அவருடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்காத நிலையில் நண்பர்கள் அவரைத் தேடிச் சென்றிருந்தனர்.
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் வவுனிக்குளம் குளக்கரையில் அவருடைய மோட்டார் சைக்கிள் காணப்பட்டபோதிலும் அவரைக் காணவில்லை.
சம்பவம் தொடர்பில்,
பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பலனாக வவுனிக்குளத்தின் நீர்வெளியேறும் பகுதி ஒன்றிலிருந்து அவரின் சடலம் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.எச் மக்ருஸ் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், குறித்த இளைஞரின் மரணம், கழுத்து நெரித்ததாலேயே நிகழ்ந்துள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உறுதிப்படுத்தியுள்ளார்.