ராஜபக்ஷக்களுடன் பயணித்தால் வடக்கு, கிழக்கு வாக்குகள் தனக்கு விழாது என்பது ரணிலுக்கு தெரியும். அதனால்தான் அரசியல் ‘டீல்’ அடிப்படையில் மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரையும் களமிறக்கப்படவுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவே இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார்.
இரத்தினபுரியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,
‘ராஜபக்ஷக்களின் காவலனே ரணில் விக்கிரமசிங்க, சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராகவும் அவரே செயல்படுகின்றார். ராஜபக்ஷக்கள் தனக்கு ஆதரவு வழங்கினால் வடக்கு, கிழக்கு வாக்குகள் கிடைக்காது என்பது ரணிலுக்கு தெரியும்.
அதனால்தான் அரசியல் சூழ்ச்சி பற்றி சிந்தித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்குமாறு ரணில் கூறியுள்ளார்.
அவ்வாறு இல்லையேல் வடக்கு, கிழக்கு வாக்குகள் கிடைக்காது. வடக்கு, கிழக்கு வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே ரணில், மொட்டு கட்சி வேட்பாளர் ஒருவரை களமிறக்குகின்றார். ஆனால், வடக்கு – கிழக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். சஜித் பக்கமே நிற்பார்கள்.’ -என்றார்.