தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள உருவாக்கவும் – மீளுருவாக்கப்படும் கூட்டமைப்பு தேர்தலுக்கானது என்பதை கடந்து தேசத்துக்கானதாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கு தமிழ்த் தேசிய தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் – இவ்வாறு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்.
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.
இதில், பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அவரின் உரையின் முக்கிய அம்சங்கள் மட்டும்
வருமாறு,
ஈழத்தமிழினத்தின் இறையாண்மைக்கு நீதி வேண்டி நாங்கள் மேற்கொள்ளும்
அறவழி போராட்டங்களையும் அபிலாசை வெளிப்பாடுகளையும் சிங்கள தேசம் எப்போது புரிந்துகொள்ளத் தலைப்படுகிறதோ அப்போதுதான் அர்த்தம் மிகுந்த இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அரச இயந்திரத்தின் கொள்கை வகுப்பையும் இனவாத நோக்கில் கட்டமைக்கப்பட்ட அதிகார பீடங்களின் செயல்முறைகளையும் நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதில் தெளிவுற்றுள்ள போதும், அடிப்படை விருப்புகளை
கோருகின்ற எமது அரசியல் உரிமையின் மீது போர் தொடுக்கும் சிங்கள – பௌத்த பேரினவாதத்தை, ‘தமிழ்த் தேசியம்’ என்னும் ஓர் குடையின் கீழ் நின்று கூட்டாக எதிர்க்கும் திராணியை உருவாக்குவதில் தான் ஈழத்தமிழினம் இன்று பெருந்தோல்வியை சந்தித்திருக்கிறது.
நம் எதிரிகள் ஒரு காலத்தில் நம் தலைவர்களை அழித்தார்கள். இன்று தலைவர்கள் உருவாவதற்கான சூழலை அழிக்கின்றார்கள். பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி ஒரு பொதுவான அரசியல் இயக்கத்துக்குள் நாம் நிலமும் புலமுமாக இணையவேண்டும். இந்தப் புள்ளியில்தான் யதார்த்த புறநிலைகளைப் புரிந்தவர்களாக, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஒரு கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்தும் அத்தகைய நேர்கோட்டில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களை பேணி ஒற்றுமைக்குள் வேற்றுமையும் வேற்றுமைக்குள் ஒற்றுமையும் காணுவது குறித்தும் – கூட்டமைப்பை மீள உருவாக்குவது குறித்தும் – அவ்வாறு மீளுருவாக்கம் பெறும் கூட்டமைப்பு என்பது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் ஊடாக நான் அழைப்பு விடுக்கிறேன்.
கொள்கைரீதியாக ஒன்றுபட்டுச் செயல்படுகின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்தவாறு புலம்பெயர் தேசக் கட்டமைப்புகளுடனும் இணைந்த வகையில் தமிழர்களின்தாகம் வெல்ல உழைப்பதே இங்குள்ள ஒவ்வொருவரினதும் முதன்மைக் கடமையாகும்.
எமது சிந்தனைகளை மீள் வடிவமைப்புக்கு கொண்டுவருவதன் மூலம் காலத்தின் வேகத்துடனும், பூகோள மாற்றங்களுடனும் எமது மக்களின் அபிலாசை தளங்களிலிருந்து தடம்புரளாது பயணிக்க வேண்டியுள்ளது. இந்த நெருக்கடிமிக்க சூழலை எளிதாகக்கையாள்வதாயின், தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், புலத்திலிருந்தவாறு இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் உறவுகளும் ஒருங்கு சேர தம் அரசியற் பயணத்தை முன்கொண்டு செல்வதற்கான எதிர்கால வழிவரைபடம் ஒன்றையும் அதுசார் கொள்கை வகுப்புகளையும் உருவாக்க வேண்டும்.
அத்தகைய தளத்தில் நின்று எல்லாத் தரப்பினரையும் இணைத்துச் செயலாற்றுவதன் தேவையுணர்ந்த ஒருவனாக, அந்தத் தளத்தின் இணைப்புப் பாலமாக இருந்து என் எல்லா இயலுமைகளை கடந்தும் ஈழத்தமிழினத்தின் அரசியல் வேட்கையைச் சுமந்த பயணத்தின் பங்குதாரராக செயலாற்றுவதில் எனக்கிருக்கும் விருப்பையும் கடமையையும் நான் இவ்விடத்தில் வெளிப்படையா
கவே பதிவுசெய்து செய்கிறேன் – என்றார்.