யாழில் ஆலயத்தில் 62 பவுண் நகை, 8 இலட்சம் ரூபா திருடிய நபர் சிக்கினார்!

யாழில் ஆலயத்தில் 62 பவுண் நகை, 8 இலட்சம் ரூபா திருடிய நபர் சிக்கினார்!

Editor 1

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிப் பூசகர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 லட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன. இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

புளியங்கூடல் சந்தியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மக்கள், முத்துவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வேண்டி சிதறு தேங்காயும் அடித்திருந்தனர்.

இந்த விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்று மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்கவின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றினார்.

அதன்பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமன் பிரேமதிலக வழிகாட்டலில் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் குழு இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய குருக்கள் ஒருவராவார். அவர் ஆலயத் திருவிழாவின்போது உதவிப் பூசகராகச் செயற்பட்டிருந்தார். சந்தேகநபரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவையும் மீட்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே,

குறித்த நபர் ஆலயத்திருவிழா நடைபெற்றதன் பின்னர் ஒரு இரவு வேறு ஆலயம் ஒன்றுக்கு வந்ததாகத் தெரிவித்து, பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து தங்கியிருந்ததாக ஆலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சந்தேநபர் கைது செய்யப்பட்டு, கோயில் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பிரதேச மக்கள் அதை வெடி வெடித்துத் கொண்டாடியுள்ளனர்.

Share This Article