ஓமனுக்கு அருகில் எண்ணெய்க் கப்பல் மூழ்கியது! இலங்கையர்கள் மூவரும் மாயம்!

ஓமனுக்கு அருகில் எண்ணெய்க் கப்பல் மூழ்கியது! இலங்கையர்கள் மூவரும் மாயம்!

Editor 1

ஓமானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலொன்று மூழ்கிக் காணாமல் போயுள்ளதுடன், அதனுடன் இலங்கையர்கள் மூவரும் காணாமல் போயுள்ளதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் அடங்குவதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை கடலில் மூழ்கிய குறித்த எண்ணெய்க் கப்பல் தற்போது முழுவதுமாக காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொமொரோஸ் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பிரஸ்டீஜ் போல்கன் என்ற குறித்த கப்பல் ஏமனின் துறைமுக நகரமான ஏடனை நோக்கிப் பயணித்துள்ளதாகக் கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு இணையதளமொன்றில் பதிவாகியுள்ளது.

2007ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த எண்ணெய்க் கப்பல் 117 மீற்றர் நீளமுடையது எனக் கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன.

கப்பல் கவிழ்ந்தமைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. கப்பலின் பணிக்குழாமினர் இதுவரையில் மீட்கப்படவில்லை எனவும் தொடர்ந்து மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

Share This Article