போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் யாழ்ப்பாணம் நீதிமன்றிலிருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் நேற்று திங்கட்கிழமை (08) நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றில் தான் மலசலக் கூடம் செல்ல வேண்டும் கேட்டதற்கு பொலிஸார் இணங்க , நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மலசல கூடத்தினுள் சென்ற பெண், உள்பக்கத்தால் மலசலக் கூட கதவினை மூடிவிட்டு, மலசல கூட்டத்தின் மேற்பகுதியிலிருந்த சிறிய ஜன்னல் ஊடாக தப்பி சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் உள்ளே சென்ற பெண் வராததால் சந்தேகம் அடைந்த பொலிஸார் பெண்ணை அழைத்தும் உள்ளே இருந்து பதில் வராததால் கதவினை உடைத்துப் பார்த்த போதே, பெண் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
தப்பி சென்ற பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை, போதைப்பொருள் வியாபாரம் நடைபெறும் இடம் என சந்தேகிக்கப்படும் இடத்தினை பொலிஸார் கண்காணித்த வேளை, காலையில் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி சென்ற பெண், அங்கு நடமாடிய நிலையில் மீள கைது செய்யப்பட்டார்.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட பெண்ணை மன்றில் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.