சாவகச்சேரி வைத்தியசாலையில் புதிதாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்திட்சகரினால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து அதற்கு எதிராக நாளை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தாபன விதி கோவைகளுக்கு எதிரான நடைமுறைகளுக்கு எதிராகவும், அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர்.
எனவே இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை காலை 8 மணியிலிருந்து. மறுநாள் காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே,
சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்றுவருகின்ற குழப்ப நிலையின் தொடராக சுகாதார அமைச்சின் செயலாளர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வைத்திய அதிகாரியை இடமாற்றலுக்கு உள்ளாகுமாறு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.
இது குறித்த அறிவிப்பு இன்று பிற்பகல் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவர், இடமாற்றலுக்கு உடன்பட மறுத்திருப்பதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கத் தரப்பின் ஊடாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே,
குறித்த வைத்திய அதிகாரிக்கு நீதி கோரி தென்மராட்சியில் நாளை பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.