இந்தியாவின் தமிழகத்தின் தனுஷ்கோடி – இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான இராமர் பாலத்தின் செயற்கைக்கோள் ஒளிப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடந்த 15ஆம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இந்தப் பாலம் இருந்தது என்றும் அந்த ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் – 2 என்ற தனது செயற்கைக் கோள் வழியாக
எடுத்த பாலத்தின் ஒளிப்படத்தையே வெளியிட்டது.
அதில், இராமர் பாலம் அல்லது இராம சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம். இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரையில் உள்ள இராமேசுவரம் தீவு மற்றும் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் தீவு இடையே அமைந்துள்ளது. இந்தப் பாலம் இந்திய பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை (தெற்கு) வங்காள விரிகுடாவின் நுழைவாயிலான பாக்கு நீரிணையை (வடக்கில்) பிரிக்கிறது.
இந்த பாலம் ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. இந்த
பாலம் 15ஆம் நூற்றாண்டு வரை பயணிக்கக்கூடியதாக இருந்தது. பின்னர் அது பல ஆண்டுகளாக புயல்களால் படிப்படியாக அரிக்கப்பட்டது.
மன்னார் தீவு சுமார் 130 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
இலங்கையின் பிரதான நிலப்பகுதியுடன் பாலம் மற்றும் ரயில் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் எதிர் பக்கத்தில், இராமேசுவரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது. இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10மீற்றர் ஆழம் மட்டுமே கொண்டது.
இங்குள்ள நிலப்பரப்பு பறவைகள் இனப் பெருக்கம் செய்யும் இடமாகவும், ஏராளமான மீன்கள், கடல் பசு, டொல்பின் மற்றும் கடல் புற்கள் ஆகியவை ஆழமற்ற நீரில் செழித்து வளரக்கூடிய இடமாகவும் உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் என்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 1975 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக நிறுவப்பட்ட அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது.
இதில் 22 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.