கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அதன் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப் பட வேண்டும் – இது விடயத்தில் விரைவான தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று அந்தப் பிரதேச மக்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர ‘எமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?’, என்று கோரி நூற்றுக் கணக்கில் கூடிய மக்கள் வீதியில் அமர்ந்து முன்னெடுத்த போராட்டத்தால் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
எனினும், மருத்துவ சேவை வாகனங் களுக்கு வழிவிடப்பட்டது.
தடைப்பட்ட ஏனைய வாகனங்களை வேறு பாதைகளால் பொலிஸார் அனுப்பி
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்தப் போராட்டத்தால் அங்கு அதிகளவான பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அத்துடன், ஆளில்லா விமானமும் கண்காணிப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெரும் பதற்றநிலை நிலவியது.
காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணியை கடந்தும் தொடர்ந்த போராட்டம் மாவட்ட செயலருடனான சந்திப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அதன் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 92 நாட்களாக தொடர்ச்சியாக கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.