வடமராட்சி – திக்கத்தில் சில நாட்களின் முன் உயிரிழந்த குடும்பப் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டது.
75 வயதான மயில்வாகனம் பாலபரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வவுனியாவை சேர்ந்தவர். அவர்களுக்கு ஒரேயொரு மகள உள்ளார். அவர் தற்போது வெளி நாட்டில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவர் வெளிநாடு சென்றது தாயாருக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த சில வருடங்களாக இருவரும் பேசவில்லை என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கணவரும் குடும்பத்தைப் பிரிந்து வவுனியாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், வெளிநாட்டிலுள்ள மகள் பற்றிய தகவல் இல்லாத நிலையில் அது குறித்து விசாரிப்பதற்காக கடந்த 14ஆம் திகதி கொழும்பு சென்று தூதரகம் ஒன்றுக்கு சென்று விசாரித்து விட்டு, 15ஆம் திகதி அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.
அவர் வீட்டுக்குள் வந்து, பயணப் பொதியை வைத்து விட்டு குளியலறைக்கு சென்ற போது விழுந்து உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது. குளியலறை வாசலில் அவரின் சடலம் காணப்பட்டது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பருத்தித்துறை பொலிஸார் வீட்டுக்கு சென்றபோது, சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது. அவரின் பயணப் பொதியில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்தன.
அதனால், இந்த மரணத்தில் குற்றச் சம்பவம் இல்லையென பொலிஸார் நம்புகிறார்கள். எனினும், மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த
விசாரணைகள் தொடர்கின்றன.