ஜெயசங்கர் முன்பாகவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர் சிறிதரன், சுமந்திரன்!

ஜெயசங்கர் முன்பாகவும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டனர் சிறிதரன், சுமந்திரன்!

editor 2

தமிழ் பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முன்பாகவும் தமிழ் அரசு கட்சி இரண்டுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

நேற்று இலங்கை வந்த இந்திய வெளி விவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதி நிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பில உள்ள இந்திய இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சோ. சேனாதிராசா, சி. சிறீதரன். எம். ஏ. சுமந்திரன். சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன், புளொட்கட்சியின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ் அரசின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் இந்த சந்திப்பில் இயலாமை காரணமாக பங்கேற்கவில்லை. சந்திப்பு ஆரம்பமானபோது, மீளவும் இந்திய வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற ஜெய்சங்கருக்கு வாழ்த்துகளையும் – வரவேற்பையும் தெரிவித்த னர். அத்துடன், தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் கோரினர்.

தொடர்ந்து, தமிழ் மக்களின் பிரச்னைத் தீர்வுக்காக மாகாண சபை முறைமையை – 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

தமிழ்த் தலைவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரன் எம். பி. எதிர்ப்புத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கான தீர்வு இது இல்லை என்று கூறி தமது கட்சியின் தீர்வு திட்ட வரைவு குறித்த ஆவணத்தையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை தாம் ஆதரிக்கின்றனர் என்று விக்னேஸ்வரன், சிறீதரன் ஆகியோர் குறிப்பிட்டனர். இவர்களின் இந்த நிலைப்பாட்டை தாம் எதிர்க்கிறார் என்று சுமந்திரன் எம். பி. உடனடியாகவே தெரிவித்தார்.

அவருக்கு சாணக்கியன் எம்.பியும் ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் எந்தளவில் உள்ளது? தமிழ் கட்சிகள் ஆர்வமாக உள்ளனவா? என்று தமிழ் கட்சிகளின் தலைவர்களை கேட்டார் ஜெய்சங்கர். இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் எம். பி., தமிழ் பொது வேட்பாளர் விடயம் பேச்சு மட்டத்திலேயே உள்ளது. சிவில் சமூக அமைப்புகள் பேசுகின்றன. சில கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. நானும் இதனை ஆதரிக்கிறேன் – என்று கூறினார். இதன்போது, சித்தார்த்தன் எம். பியும். இதே வகை யான பதிலைக் கூறினார். இதைத் தொடர்ந்து, செல்வம் அடைக்கலநாதன் எம். பி. வடக்கு மாகாணத்தில் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். திட்டமிட்ட சிங்கள – பௌத்த ஆதிக்கம் தொடர்பிலும் கருத்துரைத்தார். இந்த சமயத்தில் குறுக்கிட்ட சித் தார்த்தன் எம்.பியும் வடக்கு – கிழக்கில் காணி ஆக்கிரமிப்பு சிங்கள – பௌத்தத் தின் ‘மாஸ்டர்பிளான்’. போர் நடந்த காலத்திலேயே இது தொடர்பில் திட்ட மிட்டு விட்டார்கள் என்று அது தொடர்பான தகவல்களையும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சந்திப்பு நிறைவடைந்தது.

Share This Article