இலங்கையில் வரிச்சலுகையுடன் வாகனங்கள் பெறும் அதிகாரிகளுக்கு சிக்கல்!

இலங்கையில் வரிச்சலுகையுடன் வாகனங்கள் பெறும் அதிகாரிகளுக்கு சிக்கல்!

Editor 1

வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது, தொழில் வல்லுநர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை இரத்துச் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து தற்போது அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

இதற்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வாகன இறக்குமதித் தடை முழுமையாக நீக்கப்படுமாக இருந்தால், தொழில் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இடைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக வாகன இறக்குமதிக்கு 200 சதவீதம் வரையான வரியை ஏனைய தரப்பினர் செலுத்தும் போது, தொழில் வல்லுநர்கள் வரியின்றி வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைததியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறான சலுகைகளைப் பெற்றுவந்திருந்தனர். அவர்களில் பலர் குறித்த வரிச் சலுகை பத்திரங்களைப் பெற்று கூடுதல் விலைகளுக்கு விற்பனை செய்துவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article