செய்தியாளர் பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்! 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை!

செய்தியாளர் பிரதீபன் வீட்டின் மீதான தாக்குதல்! 04 பொலிஸ் குழுக்கள் விசாரணை!

Editor 1

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி காளிக்கோவில் பகுதியை சேர்ந்த செய்தியாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை அடையாளந் தெரியாத குழு ஒன்றினால் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம், மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குகின்ற நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு உந்துருளிகளில் பிரவேசித்த ஐந்து பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த உந்துருளி, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.

இதுதவிர,

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், மீன் தொட்டி என்பனவற்றை சேதப்படுத்தியதுடன் வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

அத்துடன் பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை நடாத்தியவர்கள் 10 லட்சத்துக்கும் பெறுமதியான பொருட்களையும் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உந்துருளியில் தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

அந்த காணொளிகளைக் கொண்டு பொலிஸ் பல கோணங்களிலும் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

Share This Article