‘பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை ஐக்கிய தேசியக் கட்சி முறித்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு நடத்தலாம்.’- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், எம்மை இணைத்துக் கொள்வதற்கான தேவைப்பாடு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கலாம். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் எமக்கு இல்லை.
நாட்டில் பிரதான அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியாகும். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பயணிக்கும் எந்த தேவைப்பாடும் எமக்குக் கிடையாது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் தொடர்பில் இருந்த பிரச்னை காரணமாகவே வெளியேறி நாம் சஜித் பிரேமதாஸ தலைமையில் தனிக்கட்சி அமைத்தோம். வெற்றியை நோக்கி எமது கட்சி பயணித்துக் கொண்டிருக்கின்றது.
எம்முடன் கூட்டணி அமைப்பதற்கு பல கட்சிகளும் முன்வந்துள்ளன. பொதுஜன பெரமுன கட்சியுடனான உறவை முறித்துக்கொண்டு சஜித் பிரேமதாஸ தலைமையில் இணைந்து செயற்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் முன்வந்தால் அது பற்றி பேச்சு நடத்தலாம் – என்றார்.
இதேவேளை பிந்திய தகவல்களின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று தெரிய வருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அறிய வருகின்றது.