உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்ரி குணரத்ன தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடொன்றை பதிவுசெய்ததைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மைத்ரி குணரத்ன இவ்வாறு குறிப்பிட்டார்.
”உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிக்கக்கூடும் என தற்போது அரசாங்கத்திற்குப் புலனாய்வு அறிக்கைகளின் ஊடாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன் காரணமாகவே ஜனாதிபதி தற்போது தேர்தல் மேடைகளில் எல்லாம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திசைக்காட்டிக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால், அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாது என தேர்தல் விதிகளை மீறும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.
ஜனாதிபதியின் இந்த கருத்து சட்டத்திற்கு முரணானது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கட்டாயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். எனவே ஜனாதிபதியின் இந்த கருத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என மைத்ரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.