இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்தக் காலப்பகுதியில் மின்சார பாவனையாளர்களிடமிருந்து மேலதிகமாக 12 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. மின் கட்டண அதிகரிப்பால் ஒட்டுமொத்த மக்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் – என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி
சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
மேலும், மின்சார சபையை 12 கூறுகளாகப் பிரித்து அவற்றைத் தனியார் தரப்பினருக்கு வழங்கும் இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு சட்டமூலம்
குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். அரச சேவை தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது தற்போதுகேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மேலதிக வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களிடமிருந்து 12 ஆயிரம் ரூபாயை மேலதிகமாக பெற்றுள்ளது.
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5 இலட்சம் மின்பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபையின் செயலாற்றுகையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்காமல் மின்சார கட்டமைப்பை சீரமைக்க முடியாது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தினால் எவ்வித மாற்றமும் ஏற்படாது. தனியார் தரப்பினரது பிரவேசத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருத்தமுடியாத அளவுக்கு எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகள்
ஏற்படும் – என்றார்.