இந்துக்களை படுகொலை செய்யவே இலங்கையர்கள் நால்வரும் இந்தியா சென்றனர் என்கிறார் வீரசேகர!

இந்துக்களை படுகொலை செய்யவே இலங்கையர்கள் நால்வரும் இந்தியா சென்றனர் என்கிறார் வீரசேகர!

Editor 1

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இலங்கையர்கள் நால்வரும் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன.

நீதிமன்றத்துக்கும் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் புலனாய்வுப் பிரிவினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் சகல தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சிறு பான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இழக்கக்கூடாது என்பதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத செயற்பாடுகளிலும்,
குண்டுத்தாக்குதல் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒத்திகையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹ்ரானின்
சகாக்களை பார்வையிடுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கும் சென்றிருந்தார்கள்.

இதன்போது எழுந்து கேள்வி யெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஆகவே அடிப்படைவாதச் செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள்
குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான், மொஹமட் ரஸ்தீன், மொஹமட் பரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர். இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்தச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.

ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப் பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.

ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாததாக் குதல்கள் இடம்பெறலாம் – என்றார்.

Share This Article