மீண்டும் நிர்வாகத் தெரிவு; தமிழரசுக் கட்சி தீர்மானம்!

Editor 1

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக கூடிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு எவ்விதமான தீர்மானங்களும் இன்றி கூட்டத்தினை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.

இதேநேரம், குறித்த விடயம் சம்பந்தமாக கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை 10.30 முதல் மாலை 6.30 வரையில் நடைபெற்றிருந்தது.

குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் முதலில் கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விவகாரங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இதன்போது பல்வேறு வாதப்பிரதவாதங்கள் நடைபெற்றன.

ஈற்றில், வழக்காளிகளின் சட்டத்தரணிகளுடன் சுமூகத்தீர்வுக்கு இணக்கப்பேச்சு நடத்துவதற்கு மத்திய குழு உறுப்பினர்களும் ஜனாதிபதி சட்டத்தரணிகளுமான எம்.ஏ.சுமந்திரன், கே.வி.தவராசா ஆகிய இருவரும் இதனை கையாளுமாறு தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளும் மீள ஆரம்பத்தில் இருந்து யாப்புக்கு அமைவாக கையாள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது சிறீதரன், அரியநேத்திரன் மற்றும் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கொண்டிருக்கின்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அதேநேரம் கே.வி.தவிராசா பொதுவேட்பாளர் தொடர்பில் உள்ள சாதக மற்றும் பாதக நிலைமைகளை சுட்டிக்காட்டினார்.

எனினும், பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் ஏற்படுகின்ற பாதக நிலைமைகள் தொடர்பில் கட்சியின் மத்தியசெயற்குழு உறுப்பினர்கள் எண்மர் வரையில் தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர். அத்துடன் தமிழ் பொதுவேட்பாளர் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை ஏலவே வெளிப்படுத்தியிருந்த சுமந்திரன் இறுதி வரையில் அமைதியாக இருந்தார். எனினும் சக உறுப்பினர்கள் அவருடைய கருத்தினையும் பகிருமாறு கோரியதை அடுத்து ஏற்கனவே இந்த விடயம் சம்பந்தமாக தான் கூறிய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தன் தன்னிடத்தில் கூறிய விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து சம்பந்தனை சந்திப்பதற்கான இணக்கம் உறுப்பினர்களிடத்தில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டு அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்ததன் பின்னர் இறுதியான தீர்தானங்களை எடுக்கலாம் என்றும் குறித்த விடயம் சம்பந்தமாக மீண்டும் மத்திய செயற்குழுவைக் கூட்டிப்பேசுவதெனவும் உறுப்பினர்கள் இணக்கம் கண்டனர்.

இதேநேரம், சுமந்திரன் தென்னிலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மூவருடன் தான் நடத்திய உரையாடல் சம்பந்தமாக பொருத்தமான நேரத்தில் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிவில் அமைப்புக்களுக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின்போது பொதுவேட்பாளர் விடயத்தில் தீர்மானத்தினை அறிவிப்பதற்கு இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 14 நாட்கள் வழங்கப்பட்ட நிலையிலேயே வவுனியாவில் கூட்டம் நடைபெற்றதோடு அது தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article