நடைபெற்று முடிந்த 2023 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் புதிய முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 50 மதிப்பெண்கள் கொண்ட புவியியல் பாடத்திற்கான பகுதி 1 வினாத்தாள் மற்றும் வரைபடங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என 14 தமிழ் மொழி மாணவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.
“நாங்கள் பகுதி 1 வினாத்தாளைக் கேட்டபோது, அது வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால் இறுதி வரை எங்களுக்கு வினாத்தாள் வழங்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் புவியியல் பாடத்தில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள். 50 மதிப்பெண்களை இழந்தது மிகவும் அநியாயம்” என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, விசேட தேவையுடைய இரு மாணவர்களும் தங்களுக்கான சேவைகளை புறக்கணித்தமை தொடர்பிலும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
வத்தளை புனித அந்தோனியார் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய விசேட தேவையுடைய மாணவன் ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு பரீட்சை திணைக்களத்தினால் அனுமதியளிக்கப்பட்ட தனிநபரின் சேவையை பெற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மாணவனின் பெற்றோர் ஆங்கில மொழியின் இரண்டாம் பாகம் வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கான தனிநபரின் சேவையை இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு மெதடிஸ் கல்லூரியின் விசேட தேவையுடைய மாணவர் ஒருவருக்கு நான்கு பாடங்களுக்கான விடைகளை எழுதுவதற்கு தனிநபரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிகாரிகள் பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த நான்கு பரீட்சைகளுக்கான மேற்படி சேவைகளை மாணவர் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில், மாணவனின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவில்லை என பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
மேற்படி பரீட்சை நிலையங்களில் தமிழ்மொழி அதிகாரிகள் நிறுத்தப்படவில்லை. இதனால், அங்கிருந்த அதிகாரிகளால் மாணவர்களின் தேவைகளை தொடர்புகொள்ளவோ அல்லது புரிந்து கொள்ளவோ இயலவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சைகளுக்கு சட்டத்தில் விசேட ஏற்பாடுகள் உள்ளது. அவ்வாறான சட்ட ஏற்பாடுகள் இருக்கும் போது பிள்ளைகளின் உரிமைகள் மீறப்படுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.