உள்ளகப் பொறிமுறை ஊடாக எமது மக்களின் பிரச்னைகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது. இதற்கு கடந்த 15 வருட காலமே சான்றாக அமைகிறது என்று பாராளுன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க் கழமை பாராளுமன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னோர் ஆணைக்குழுவை அமைப்பது செப்ரெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவா கூட்டத் தொடருக்கான கண்துடைப்பு நாடகமாகும். உலகத்தில் இடம்பெறுகின்ற எந்த வொரு போரும்
சுத்தமான யுத்தம் கிடையாது. ஆயுதப் போரில் அத்துமீறல்கள் இடம்பெற்றே தீரும்.
எனினும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு பொறுப்புள்ளது.
விசேடமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? இல்லையா? இந்த விடயங்களை தெளிவுபடுத்துவதும் அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியங்கள் வழங்கப்பட்ட பின்னர், யுத்தத்தின் இறுதி இரண்டு நாட்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தார்கள் என அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவே தெரிவித்துள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின்
பொறுப்பாகும் – என்றும் கூறினார்.