பொது வேட்பாளரை நிறுத்துவது என்று சிவில் அமைப்புக்கள் கூடித் தீர்மானம்!

பொது வேட்பாளரை நிறுத்துவது என்று சிவில் அமைப்புக்கள் கூடித் தீர்மானம்!

Editor 1

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் களத்தை ஜனாதிபதியை தெரிவதற்கான தேர்தல் என்ற அடிப்படையை நிராகரித்து ஈழத் தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது என்றும், இதற்கமைய தமிழ் பொது வேட்பாளரை வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது எனவும் தமிழர் தாயகத்தின் முக்கியமான சிவில் அமைப்புகள் கூடித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் – சிந்திப்பதும் – செயல்படு வதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் நேற்று செவ்வாய்க் கிழமை வவுனியாவில் விடுதி ஒன்றில் ஒன்று கூடியபோதே இந்தக் கூட்டுத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

மேலும், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அந்தத் தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது – இதற்கமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது, தமிழ்
மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புகளை நோக்காகக் கொண்டு செயல்படுவது ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நேற்றைய கூட்டத்தில், தென்கயிலை ஆதின முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார், நல்லூர் – சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவல்,
பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம், கலாநிதி. க. சிதம்பரநாதன், அருட்பணி
த ஜீவராஜ், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், மனித உரிமை செயல்பாட்டாளர் அருட்பணி பி ஞானராஜ் (நேரு), மக்கள் மனு வடக்கு – கிழக்கு சிவில் சமூக குழு, நீதி சமாதான ஆணைக்குழு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம், தமிழ் சிவில் சமூக அமையம், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம், அறிவார் சமூகம் – திருகோணமலை, அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு, கரைச்சி வடக்கு சமாசம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம்,
சிவில் அமைப்பு – மட்டக்களப்பு , தமிழ் ஊடகத் திரட்டு, கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், மாவட்ட கமக்காரர் அமைப்பு – வவுனியா, தமிழ் இளையோர் மக்கள் இயக்கம், தமிழர் கலை பண்பாட்டு மையம், எம்பவர் நிறுவனம், குரலற்றவர்களின் குரல், மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு, சமூக மாற்றத்துக்கான அமைப்பு – வவுனியா, தமிழ் சமூக செயல்பாட்டாளர்கள் இணையம் – திருகோணமலை, புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு – திருகோணமலை, நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு – திருகோணமலை ஆகியவை பங்கேற்றன.

Share This Article