இலங்கையின் புகழ்பூத்த மூத்த வயலின் இசைக் கலைஞர் அம்பலவாணர் ஜெயராமன் கடந்த இரவு காலமானார்.
யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட ஜெயராமன் பிரபல மிருதங்கக் கலைஞர் அம்பலவாணரின் புதல்வராவார்.
யாழ்.பொது நூலகத்தில் பணியாற்றிய அவர், சமகாலத்தில் பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்வுகளில் பங்குகொண்டு விளங்கினார்.
பல நூற்றுக்கணக்கான தேசவிடுதலைப் பாடல்களில் ஜெயராமன் அவர்களின் வயலின் இசை மெருகேற்றியிருக்கிறது.
பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்திருக்கிறார்.
நேற்று (07)க் காலை யாழ்.மத்தியகல்லூரி அரங்கில் புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றுக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஒன்றின் பின்னணி வாத்தியங்களில் வயலின் கருவியை இசைத்திருந்த அவர் மாலை இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்வு ஒன்றின் பின்னணி வாத்தியங்களில் வயலின் இசைத்திருந்தார். குறித்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இறுதி வேளையில் உடல் நிலைப் பாதிப்பினால் அவர் சிரமப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் இரவு அவருடைய உயிர் பிரிந்துள்ளது.
மிகச் சிறந்த இசை ஆளுமையாக விளங்கியிருந்த அவரின் பிரிவு ஈழத்து இசை உலகிற்கு பேரிழப்பாகும் என்கின்றனர் சக கலைஞர்கள்.