கொக்குத்தொடுவாய் புதைகுழி; வழக்கு விசாரணை வைகாசி 16 இற்கு ஒத்திவைப்பு!

கொக்குத்தொடுவாய் புதைகுழி; வழக்கு விசாரணை வைகாசி 16 இற்கு ஒத்திவைப்பு!

editor 2

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு  தொடர்பான  வழக்கு  இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்  முன்னிலையில் இடம் பெற்ற வழக்கு விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா,  முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்கிளாய் பகுதி  கிராம அலுவலர், சட்டத்தரணிகளான வி கே நிறஞ்சன், கணேஸ்வரன் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி துஷ்யந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், அகழ்வு பணியினை நடாத்த இன்னும் நிதி கிடைக்கபெறவில்லை எனவும் தற்போது அகழ்வுப்பணிக்கென போடப்பட்டுள்ள பாதீடு அதிகமாக காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் மயில்வாகனம் செல்வரட்ணம் என்பவரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பாதீடு  சீர்செய்து அனுப்பி நிதியினை பெறுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு, குறித்த வழக்கு விசாரணை வைகாசி மாதம் 16 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று மொத்தமாக  40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

Share This Article